இன்று உலகில் அசைவுக் கல்வி – Movement Education வளர்ந்து வருகின்றது. உடல் அசைவானது உள அசைவுடன் இணைந்து குழந்தையின் அறிவுத்திறனை விரிவாக்குகின்றது.
குழந்தைகளின் அசைவுகளை முப்பெரும் பிரிவுகளாக உளவியலாளர்கள் பகுத்துள்ளனர்.
செயல் நிலைப்பட்ட அசைவுகள்: இவற்றில் ஏறுதல், தள்ளுதல், தாவுதல், சமநிலைப்படுத்துதல் போன்றவை அடங்குகின்றன. இவ்வகை அசைவுகளால் பிற்காலத்தில் குழந்தையின் தசைநார்த் திறன்கள் மேம்பாடு அடைகின்றன.
உடற்பலத்தையும் வேகத்தையும் சேர்த்து மேற்கொள்ளும் அசைவுகள்: ஓடுதல், பாய்தல், நீந்துதல் போன்றவை இதற்கான உதாரணங்களாகும். இவற்றிலிருந்து மெய்வல்லுனர் திறன்களும் விளையாட்டுத் திறன்களும் பிற்காலத்தில் வளர்ச்சியடைகின்றன.
ஒத்திசைவுடன் இணைந்த அசைவுகள்: தாளத்தோடும் இசையோடும் இணைந்த அசைவுகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவற்றால் பிற்காலத்தில் குழந்தையின் ஆட்டத்திறன்கள், நடனத்திறன்கள் வளர்ச்சியடையும்.
அசைவுக் கல்வியுடன் இணைந்தே ஒரு குழந்தையின் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், ஆற்றுகைத்திறன் வளர்ச்சியடைவதால் பெற்றோரும் ஆசிரியர்களும் இத்துறையில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். இவற்றை உதவாக்கறை விஷயங்களாக நினைத்துவிடக்கூடாது. இவற்றை இன்னும் நாம் ஆழமாகப் பார்க்கும் போது ஒரு மனிதனின் நுண்மதித்திறன், ஆக்கத்திறன் போன்றவற்றின் வளர்ச்சிக்கும் அசைவுக்கல்வி இன்றியமையாதது.
குழந்தைக்கு உரிய முறையில் அசைவுக்கல்வியை வழங்கினால் அவர்களின் தன்னம்பிக்கை, தமது நடத்தையை தாமே நெறிப்படுத்தும் ஆற்றல் போன்றன வளர ஆரம்பிக்கும். குழந்தைகளின் மனவெழுச்சிக் கட்டுப்பாடுகளுக்கும் அசைவுக்கல்வி மிகவும் துணைபுரிகின்றது. பெரியவர்கள் செய்வதைப் பார்த்து செய்யும் திணிப்பு முறைகள் குழந்தையின் ஆளுமையைச் சிதைக்கக் கூடியவையாகும். அசைவுகள் கற்றுக்கொள்ளக்கூடியது என்பதால் சவால்களை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். உள்ளார்ந்த அறிவை, அனுபவத்திறமையை வளர்ப்பதற்கும் அசைவுகள் பொருத்தமான கல்வி முறையாகும்.
அசைவுக்கல்வி வளர்ப்பதற்கு முன்நிபந்தனையாக பெற்றோரும் ஆசிரியரும் குழந்தைகளை உற்று நோக்க வேண்டும். இவ்வகையான உற்றுநோக்கலுக்கு நான்கு வகையான வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்று கூறுகிறார் பேராசிரியர் சபா. ஜெயராசா. அவையாவன,
அ) அசைவுகளின் போது உடலின் எப்பகுதி கூடுதலாகச் சம்பந்தப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்தல்.
ஆ) எங்கு அசைவு ஏற்படுகின்றது என்பதை நோக்கல். மேல் நோக்கிய அசைவு, தரை அளவு சம்பந்தப்படும் அசைவு என்ற பண்புகள் எங்கு என்பதோடு இணைந்தது.
இ) எவ்வாறு அசைவு ஆற்றுகையாக மாறுகின்றது என்பது இப்பிரிவில் அடங்கும். அசைவின் விசை மெதுவானதா, வேகமானதா என்பதை நோக்குதல், அசைவின் பலத்தை மதிப்பிடுதல் போன்றவை இப்பிரிவில் இடம்பெரும்.
ஈ) அசைவுகள் எவற்றுடன் சம்பந்தப்படுகின்றன என்பதை இனங்காணல் இப்பிரிவில் இடம்பெறுகின்றது. இலக்குகளுடன், சகபாடிகளுடன் எவ்வாறு அசைவுகள் சம்பந்தப்படுகின்றன என்று விரிவாக நோக்கப்படும்.
அவர் மேலும் கூறும் போது மேற்கூறிய அவதானிப்புகளை அடிப்படையாக வைத்து அசைவுக்கல்வியை ஒழுங்கமைப்பதற்கான வழிகாட்டல்களைக் கூறுகின்றார்.
அ) உடலோடு தொடர்புடைய கற்றற் பரப்புக்கள் பின்வருமாறு இடம் பெறுகின்றன.
முழு உடலையும் பயன்படுத்தும் செயற் கோலங்கள்.
தனித்தனி உடல் உறுப்புக்களைப் பயன்படுத்தும் செயற் கோலங்கள்.
உடல் உருவத்தோடு இணைந்த செயற்கோலங்கள். வளைந்து நிற்றல், சரிந்து நிற்றல் ஆகியவை.
ஆ) அசைவு இடைவெளிக்கு முதன்மை கொடுக்கும் கற்றல் பரப்புக்கள் பின்வருமாறு இடம்பெறுகின்றன.
அண்மை நிலை – சேய்மை நிலை
தளத்தில் நிகழும் அசைவுகள்
மேல் வெளியில் நிகழும் அசைவுகள்
தாள் மட்டம், உயர் மட்டம், நடுத்தர மட்டங்களில் நிகழும் அசைவுகள்
முன் அசைவு, பக்க அசைவு, பின் அசைவு
இ) உடலின் பண்புகளை வலியுறுத்தும் கற்றல் பரப்புக்கள்
உசார் நிலை, தளர்ந்த நிலை, ஓய்வு நிலை
மனவெழுச்சிகள் கலந்த அசைவுகள்
வேறுபட்ட விசைகள் கலந்த அசைவுகள்
பாரங்கள் தூக்கும் அசைவுகள்
ஈ) சம்பந்தப்பட்ட அசைவுகளோடு இணைந்த கட்டற்ற பரப்புகள்
மாணவரும் – மாணவரும்
மாணவரும் – அசையும் பொருட்களும்
மாணவரும் – அசையாப் பொருட்களும்
மாணவரும் – ஆசிரியரும்
குழந்தைகளுக்கான கல்வி முறை இன்று உலக அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. பன்மைத்துவப் பாங்கிலான செயற்பாடுகளை உள்ளடக்கியதாக அக்கல்விமுறை வளர்ச்சியடைந்து வருகின்றது. இந்த மாற்றங்கள் குறித்த எந்தவித அறிவும் இல்லாதது மட்டுமன்றி பாரம்பரிய, நெகிழ்ச்சியே இல்லாத வகுப்பறையினை இன்னமும் நமது கல்விமுறையில் வைத்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
சூழலுடனான ஊடாட்டத்தை விருத்தி செய்தல், சூழலை விளங்கிக் கொள்ளல், சூழலுடன் பொருந்துகையை ஏற்படுத்தல், உடற் பலத்தை தனியாகவும் கூட்டாகவும் பிரயோகித்தல், சமூக இணக்கம் போன்ற தொழிற்பாடுகளை மேற்படுத்துவதற்கு அசைவுக் கல்விக்கு இணையாக எதுவுமே இல்லை. அசைவுகள் மூலமாக ஆற்றல்கள் வெளிப்படுகின்றன. நெறிப்படுகின்றன. எழுதுதல், பேசுதல், பாடுதல் ஆகிய அனைத்தும் அசைவுகளுடன் நெருங்கிய தொடர்புடையன. உடலை இயக்கி உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் அசைவுகளே நடைபெறுகின்றது. அவ்வாறே அழகியற் செயற்பாடுகள் அனைத்தும் அசைவுகளிலிருந்தே தோற்றம் பெறுகின்றன.
Add caption |
உளவியலாளன் மட்டுமன்றி சமூக, மானுடவியலாளர்களும் அசைவுகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். முதன்மைச் சமூகங்கள், பழங்குடி மக்கள் சடங்குகளிலும் நடனங்களிலும் செயற்பாடுகளிலும் மரபுகளிலும் காணப்படும் அசைவுகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளில் நூற்றுக்கணக்கான விளையாட்டுப் பாடசாலைகள் – Playing School இருக்கின்றன. எமது குழந்தைகளுக்கும் அசைவுக்கல்வியினை வழங்கினால் இதன் முழுப்பயனை அடைய முடியும்.
ரசிகன்
0 comments:
Post a Comment