தளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.

palane

கிளிக் பண்ணுங்கோ

Wednesday, 9 February 2011

ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை


"என் குழந்தை சாப்பிட மறுக்கிறது; டானிக் ஏதும் சொல்லுங்களேன்...' பெரும்பாலான பெண்கள், தங்கள் குழந்தைகள் குறித்து கூறும் புகார் இது. யாராவது, "என் குழந்தை அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி சாப்பிடுகிறது; உடற்பயிற்சியே செய்வதில்லை; உடல் குண்டாக இருக்கிறது...' என்று சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா?

முறையற்ற உணவு வகைகளை குழந்தைகள் அதிகமாக உண்பதை பெற்றோர் கவனிப்பதே இல்லை. ஆனால், குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம்; ஒல்லியாக இருப்பது சுகவீனம் என நினைக்கின்றனர். ஆபத்தான கற்பனை இது! குழந்தை பிறக்கும் போது என்ன எடை இருந்ததோ அதை விட மூன்று மடங்கு, முதல் ஆண்டு முடியும் போது இருக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால், முதல் ஆண்டு முடியும் போது ஒன்பது கிலோவாக இருக்க வேண்டும். அதன் பிறகு, இதேபோல் எடை கூடும் எனக் கருதக் கூடாது.

வயதுடன், எண் மூன்றைக் கூட்டி, ஐந்தால் பெருக்கினால் வரும் எடையை, பவுண்டு கணக்காகிறது. அதை, 2.2 எண்ணால் வகுத்தால் கிடைப்பதே, குழந்தையின் எடை. 5 வயது நிறைந்த குழந்தைகளின் எடையை, பி.எம்.ஐ., பார்த்து அளந்து கொள்ளலாம். கிலோ அளவில் உள்ள எடையை, மீட்டர் அளவில் உள்ள உயரத்தின் இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் தொகை 23 ஆக இருக்க வேண்டும். அது தான் சரியான எடை. குழந்தை எடை குறைவாக இருப்பது தெரிந்தால், குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கான பரிசோதனை முறை, சிகிச்சை முறை ஆகிய அனைத்தும், வாலிப வயதினரை விட வித்தியாச மானது. எடை குறைவுக்கான பிரச்னை மிகச்சிறியதாக கூட இருக்கலாம். வயிற்றில் புழு வளர்ந்து, பிரச்னை ஏற்படுத்தலாம். ஒரே ஒரு, "அல் பெண்டிசால்' மாத்திரை சாப் பிட்டால் பிரச்னை தீர்ந்து விடும். 

பரிசோதனையில் எதுவும் தெரிய வில்லை எனில், குழந்தையின் உணவு முறையில் கோளாறு இருப்பதாக அர்த்தம். பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தான் மிகச்சிறந்த உணவு. பிறந்த 120 நாட்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. வயிற்றுப்போக்கு, சளி, இருமல், பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, தொற்றுக்கள் ஆகிய அனைத்திலிருந்தும் குழந்தையைக் காக்கும் கிருமி நாசினிகள், நோய் எதிர்ப்புச் சத்துக்கள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குழந்தை உணவு தயாரிப்பாளர்கள், இத்துறையில் நெடிய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். தாய்ப்பாலுக்கு ஈடான உணவை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அவர்களின் தயாரிப்புக்கள் மிகச்சிறந்தவை எனக் கூறியது பொய்யாகி விட்டது. 

மற்ற உணவுகளை, குழந்தை பிறந்த 120 நாட்களுக்குப் பின் கொடுக்கலாம். தாய்ப்பால் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும்; அதேபோன்ற உணவு வகைகளைக் கொடுக்க துவங்கலாம். அரிசி, கோதுமை அல்லது ராகி கஞ்சி கொடுக்கலாம். ஏற்கனவே சமைக்கப்பட்டு, புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடிமேடு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். 

உணவை கெடாமல் இருக்க கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை, குழந்தையால் ஜீரணிக்க இயலாது. புதிய உணவு வகைகளை, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் மாற்ற வேண்டும். ஒன்று சரியில்லை எனில், அடுத்த புதியதை, அடுத்த வேளையே மாற்றக் கூடாது. குழைக்கப்பட்ட வாழைப்பழம், வேக வைக்கப்பட்ட ஆப்பிள், பழச்சாறுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. வீட்டிலேயே தயாரிக்கப்படும் இடியாப்பம், இட்லி ஆகியவற்றை பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றின் கலவை, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் சில காய்கறிகளில் உப்பு சேர்த்து வேக வைத்து, கூழாக்கி, மீண்டும் அதை கொதிக்க வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். பத்து மாதங்கள் நிரம்பியதும், நீர் கலக்காத பசும்பால், ஒரு கப் கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 400 மி.லி., அளவுக்கு மேல் கொடுக்க கூடாது. காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், வயிறு நிரம்பி, பசியே ஏற்படாது. எனவே, காலை உணவு கொடுத்த பின், பால் கொடுக்கலாம். 100 மி.லி., பாலில் 60 கலோரி சத்து உள்ளது.

அதிக அளவு பால், வயிற்றை நிரப்புமே தவிர, திட உணவைப் போன்று கலோரிச் சத்தை அதிகரிக்காது. சத்து பானங்கள், உண்மையில் சத்தைக் கொடுப்பதில்லை. அதிகளவில் சாப்பிடும் போது தான், இவற்றில் சத்துக்கள் கிடைக்கின்றன.
ஓடி ஆடி விளையாடாமல், "டிவி' முன் அமர்ந்திருக்கும் குழந்தை, நல்ல ஆரோக்கியத்துடன், பசியுடன் இருக்காது. விளையாடும் பழக்கம் குழந்தைகளுக்கு இன்றியமையாதது. விளையாட்டுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை; எனவே, பெற்றோர் தான் இதற்கு ஊக்கமளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது, ஓடி ஆடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவை ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

மில்க் பிஸ்கட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள், நொறுக்குத் தீனிகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை சத்தே இல்லாமல், வயிற்றை நிரப்புபவை. உணவைச் சாப்பிடாமல், இந்த நொறுக்குத் தீனிகளை தின்று, வயிற்றை நிரப்பி, "டிவி' முன் அமர்வது நல்லதல்ல; இதனால் உடல் ஊதிப் போய்விடும். எப்போதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவது நல்லது தான். ஆனால், பிரதான உணவுக்கு அது ஈடாகாது. சில நேரங்களில், பசி ஏற்படுவதற்காக, டானிக் ஏதும் இருக்கிறதா என, டாக்டரைப் பார்க்க வருபவர்கள் கேட்கின்றனர். "சைப்போஹெப்டாடைன்' என்ற ரசாயனம் பசியை ஏற்படுத்தும்; கூடவே, அதிவேகச் செயல்பாட்டையும் ஏற்படுத்தி விடும்.

எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. ஒரு வீட்டில், பெற்றோர் இருவரும், ஒல்லியாக இருந்தால், குழந்தைகளும் ஒல்லியான உடல் வாகையே பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இது பரம்பரையாகவோ, உணவுப் பழக்கத்தாலோ, பல சந்ததியாக உள்ள உடற்பயிற்சிப் பழக்கத்தாலோ இருக்கலாம். எனவே, குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என நினைத்து, விசனப்படாதீர்கள்! 


நன்றி தினமலர்

0 comments:

Post a Comment